இஸ்ரேல் – அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடைந்தால், சீனா அதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய சூழலில், சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து ஈரானுக்கான ஒரு 5 அம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. ஆனால் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்தத் திட்டத்தை ஏற்க ஆர்வம் காட்டவில்லை.
ஒருவேளை அமெரிக்கா ஈரானின் சிவிலியன் கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தால், அது சீனாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். இதனால், சீனா தனது “ஆக்கிரமிப்பு” கொள்கையைத் தளர்த்தி, அமெரிக்காவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஊடுருவல்களை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
அமெரிக்காவின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைகள் சீனாவின் இலக்காக மாறக்கூடும். ”அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது முழு பலத்தையும் செலவழிக்கும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது பிடியை இறுக்க முயலும்” என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது வெறும் பிராந்திய மோதலாக மட்டுமல்லாமல், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கே சவாலாக அமையும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தைவான் விவகாரத்தையும் இதனுடன் இணைத்துச் சீனா காய்களை நகர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்போது ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் சீனாவிற்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகம் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், சீனா தனது மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மூலம் அதனைச் சமாளித்து வருகிறது. ஆனால், ஒரு நீண்ட காலப் போர் தங்களது பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கும் என்பதால், சீனா தனது எதிர்ப்பை வெறும் அறிக்கைகளுடன் நிறுத்திக் கொள்ளாது என்பது வல்லுநர்களின் கணிப்பு.
டிரம்ப் விதித்துள்ள 48 மணி நேரக் கெடு முடிவுக்கு வரும்போது, சீனாவின் அடுத்தகட்ட நகர்வுகள் உலக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
