Monday, February 23, 2026

தமிழகம் முழுவதும் முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை கட்டாயமாகப் பின்பற்றினால்தான் முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் (திருத்த) சட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் முடி மாற்று சிகிச்சை மையங்களை முறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் பதிவு செய்வதில் சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது. பல மையங்கள் அழகு நிலையங்கள் அல்லது சருமப் பொலிவு மையங்கள் என்ற பெயரில் செயல்பட்டதால், அவை சுகாதாரத்துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருந்தன. இதனால் அவற்றுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையைத் தீர்க்கும் வகையில் புதிய நடைமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை முழுமையாகக் கடைபிடித்தால்தான் முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு பதிவு வழங்கப்படும்.

மேலும், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சைக்கு முன், அதற்கு உட்படுபவரிடமிருந்து எழுத்து மூல ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். இம்மையங்கள் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகள் இல்லாமல் அல்லது விதிமுறைகளை மீறி சிகிச்சை வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனத்தின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related News

Latest News

error: Content is protected !!