இந்திய ரிசர்வ் வங்கி தங்கக் கடன்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இப்போது தங்கத்தின் சந்தை மதிப்பில் 65% மட்டுமே கடனாகக் கிடைக்கும். இதுவரை 75% வரை கடன் கிடைத்தது. புதிய மாறுதல்கள், குறிப்பாக ஒரே கட்டணத்தில் திருப்பிச் செலுத்தும் ‘புல்லட் லோன்களுக்கு’ முக்கியமாக பொருந்தும்.
இதன் மூலம், கடன் பெறுபவர் ₹7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தரும்போது, அதிகபட்சமாக ₹4.55 லட்சம் வரை மட்டுமே கடன் பெற முடியும். தங்கத்தின் விலை சரிந்தால், கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் அபாயத்தை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், புல்லட் லோன் வரம்பு ₹4 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புல்லட் லோனில், 12 மாதங்களுக்கு எதையும் செலுத்த வேண்டியதில்லை; காலத்தின் முடிவில் ஒரே முறை அசலும் வட்டியும் செலுத்த வேண்டும். இதுவே வாடிக்கையாளர்களுக்கு சவுகரியமாக இருந்தாலும், வங்கிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூறுகிறது ரிசர்வ் வங்கி.
மேலும், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளருக்கு, கடன் வழங்குபவர் ஏழு நாட்களுக்குள் தங்கத்தைத் திருப்பித் தரவேண்டும். தவறினால், தினசரி ₹5,000 அபராதம் விதிக்கப்படும். வாடிக்கையாளர் தங்கத்தை வாங்க வராவிட்டாலும் இந்த அபராதம் விதிக்கப்படும்.
தங்கத்தின் உரிமை தொடர்பாகவும் கடுமையான நிபந்தனைகள் வந்துள்ளன. ரசீது இல்லாமல் தங்கத்திற்கு கடன் பெறும் போது, அதற்கான உரிமையை நிரூபிக்க வேண்டும். திருமண பரிசுகள் போன்ற சந்தர்ப்பங்களில் இது பொதுவாக இருந்தாலும், அதன் நம்பகத்தன்மையை சோதிக்கும் பொறுப்பு கடன் வழங்குபவருக்கே உள்ளது.
இப்போது இந்த விதிகளை வங்கிகள், NBFCக்கள், தனியார் தங்க நிதி நிறுவனங்கள் என எல்லா தரப்புகளுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்ற வேண்டும். வங்கிகள் 8 முதல் 10 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறார்கள். ஆனால் NBFCக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 14 முதல் 16 சதவீதம் வரை அதிக வட்டியுடன், மறைமுகக் கட்டணங்களும் வசூலிக்கின்றன. தவணை தவறினால் கூடுதலாக 4% வட்டியை வசூலிக்கும் சில நிறுவனங்களின் நடைமுறையையும் ரிசர்வ் வங்கி சீர்செய்ய உள்ளது.
இதற்கு பின்னணியில் உள்ளது என்னவென்றால், கடந்த ஆண்டு தங்கக் கடன் சந்தை 87% வளர்ச்சி கண்டுள்ளது. 2024–25 நிதியாண்டில் மட்டும் ₹1.91 லட்சம் கோடி மதிப்பிலான தங்கக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இது, கிரெடிட் கார்டு வளர்ச்சியைவிட உயர்வாக இருக்கிறது.