சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-145, நெற்குன்றம், பெருமாள் கோயில் தெருவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடத்தில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டிடம், மாநகராட்சியின் அலுவலர்களால், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து இன்று (12.12.2025) ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், காவல் துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
