நம் அன்றாட வாழ்க்கையில் போன் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதுவும், பலர் வாகனங்களை இயக்கிக்கொண்டு போன் பயன்படுத்துவதுண்டு. இது மிகவும் தவறான செயலாகும். இதற்காக புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சீனியர் சூப்பிரண்டு திவ்யா செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் சிறப்பு அமலாக்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள் மற்றும் விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 184 (சி)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த மாதம் 13ந் தேதி நடைபெற்ற சிறப்பு இயக்கத்தின் போது மொத்தம் 302 சலான்கள் ரூ. 3.02 லட்சம் தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதே நோக்கமாகும். பொதுமக்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன்களைப் பயன்படுத்தாமல் இருக்கவும், அழைப்புகள் அல்லது செய்திகளைக் கவனிக்க வேண்டுமானால், வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
