64 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் RBI! அதிர வைக்கும் பின்னணி!

நம்ம வீட்டுத் தங்கத்தை நாம பீரோவில் பத்திரமாக வைப்போம். ஆனால், நம் நாட்டின் தங்கம் எங்கே இருக்கிறது என்று தெரியுமா? பல ஆண்டுகளாக, இந்தியாவின் தங்கக் கருவூலத்தில் ஒரு பெரும்பகுதி வெளிநாடுகளில், குறிப்பாக இங்கிலாந்து வங்கியில் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி, டன் கணக்கில் தங்கத்தை இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டு வருகிறது. ஏன் இந்த திடீர் நடவடிக்கை?

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 64 டன் தங்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இப்போது இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880 டன்கள். அதில், இதுவரை இல்லாத சாதனையாக, 576 டன் தங்கம் நம் நாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 38% தங்கம் தான் இந்தியாவில் இருந்தது. ஆனால் இன்றோ, 65%க்கும் அதிகமான தங்கம் நம் கட்டுப்பாட்டில், நம் மண்ணில் இருக்கிறது.

ரிசர்வ் வங்கி இதற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை. ஆனால், இதன் பின்னணியில் ஒரு பெரிய உலக அரசியல் இருக்கிறது. 2022-ல் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தபோது, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து, வெளிநாடுகளில் இருந்த ரஷ்யாவின் கோடிக்கணக்கான டாலர் சொத்துக்களையும், தங்கத்தையும் முடக்கின. இதைப் பார்த்த இந்தியா, ‘நாளைக்கு நமக்கும் இதே நிலைமை வந்தால் என்ன செய்வது?’ என்று யோசிக்கத் தொடங்கியது. நம் சொத்து, நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகத்தான் இந்தத் தங்கம் தாய்நாடு திரும்புகிறது.

இது வெறும் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமல்ல. அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இது. அதனால்தான், இந்தியா அமெரிக்க அரசுப் பத்திரங்களில் செய்யும் முதலீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டு, தங்கத்தை அதிகமாக வாங்கிக் குவிக்கிறது. “இது நன்கு யோசித்து எடுத்த முடிவு” என்று நம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதும் இதை உறுதி செய்கிறது.

இன்று, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 702 பில்லியன் டாலரைத் தாண்டி, உலகின் நான்காவது பெரிய சக்தியாக இருக்கிறது. நம் நாட்டுத் தங்கத்தை நம் நாட்டுக்குள்ளேயே கொண்டு வருவது, இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் வலுவாக்குகிறது. இது, உலக அரங்கில் இந்தியாவின் தற்சார்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார சக்திக்கான ஒரு தெளிவான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

Related News

Latest News