வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஒரு புதிய சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, இனிமேல் சர்வதேச விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்த பின், ‘புறப்பாடு’ பகுதியில் உள்ள அந்நியச் செலாவணிக் கவுன்ட்டர்களில் இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
முன்னதாக இந்த வசதி வெளிநாட்டு பயணிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியக் குடிமக்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் (NRI) இதைப் பயன்படுத்தலாம்.
இதற்கு முன்பு, வெளிநாடு செல்லும் இந்தியர்கள் பணத்தை மாற்றுவதற்காக ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், பணமாற்று நிலையங்கள், விமான நிலைய அந்நியச் செலாவணிக் கவுன்ட்டர்கள், ஆன்லைன் சேவைகள் அல்லது Forex கார்டுகள் போன்றவற்றை முன்கூட்டியே பயன்படுத்த வேண்டியிருந்தது.
புதிய மாற்றத்தின் மூலம், கடைசி நேரத்தில் பணத்தை மாற்ற மறந்த பயணிகளுக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். குடிவரவு மற்றும் சுங்கச் சோதனைகளை முடித்த பின் கூட, விமானம் ஏறும் பகுதிக்குள் பணத்தை மாற்றிக்கொள்ளும் வசதி கிடைப்பதால், பயணிகளின் நேரமும் சிரமமும் குறையும். அடிக்கடி வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
