Wednesday, December 24, 2025

ராமேஸ்வரம் மாணவி வழக்கு : கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஷாலினி அங்குள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது முனியராஜ் எனும் இளைஞர், கடந்த 6 மாதங்களாக அவரை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், மாணவி ஷாலினி காதலை ஏற்க மறுத்தார்.

இதனால் ஆத்திரம் கொண்ட முனியராஜ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ராமேசுவரம் துறைமுக போலீஸ் நிலைய போலீசார், முனியராஜை கைது செய்தனர். அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். முனியராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்தது குறித்து போலீசார் கூறுகையில், “சில மாதங்களாக நான், மாணவி ஷாலினி பள்ளி செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதும் பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினேன்.

எனது நெஞ்சில் ஷாலினி என பச்சையும் குத்தி உள்ளேன். ஆனால், நான் படிக்க வேண்டும். உயர்கல்விக்கு செல்ல வேண்டும். எனவே என்னை பின்தொடர வேண்டாம் என ஷாலினி கூறினாள். இனியும் தன்னை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்தால் பெற்றோர் மூலம் போலீசில் புகார் அளிப்பேன் எனவும் கூறினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கத்தியால் குத்தி கொலை செய்தேன்” என்று வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது முனியராஜை ராமநாதபுரம் சிறையில் அடைந்துள்ளனர்.

Related News

Latest News