சேலத்தில் பாமக பொதுக்குழு நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அன்புமணியை கடும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், பொதுக்குழுவின் இறுதியில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
இன்று பொதுக்குழு, செயற்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பொதுவாக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில், அந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம்.
எனக்கு இருக்கும் ஆதங்கத்தை கொட்டி, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு மணி நேரம் தேவை. அந்த வகையில், பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து வந்தது, எந்தக் கூட்டணி என்பது. எனக்கு அதிகாரம் கொடுத்துவிட்டீர்கள். எப்போது கூட்டணியை அறிவிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல முடிவெடுப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
30 ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக உழைத்த ஜி.கே.மணியை தரக்குறைவாக பேசுகிறார்கள். என்னையும் நேரடியாக தாக்குகிறார்கள்.
எனக்கு ஒரு நாள் தூக்கம் வந்தது. கனவில் எனது தாய் வந்து, ஏன் அழுகிறாய் என்று கேட்டார். மகனை சரியாக வளர்க்கவில்லை. மார்பிலும், முதுகிலும் ஈட்டியை வைத்து குத்துகிறார் என்றேன். அவருக்கு நான் என்ன குறை வைத்தேன். எல்லாம் செய்திருக்கிறேன் என்றேன். நீ ஒரு குறையும் வைக்கவில்லை என்றார்.
இந்த கூட்டத்தை பார்க்கும்போது 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் என் பின்னால்தான் நிற்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. செலவு செய்து கூட்டத்தை கூட்டி பிரமாண்டத்தை காட்டுகிறார். இந்த தேர்தல் அவருக்கு பதில் தரும்.
இந்தத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அது வெற்றியை தரும். என் பின்னால் வரும் மக்கள் எப்போதும் என்னை கைவிட்டதில்லை.
பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது தூக்கம் வருகிறது. புத்துணர்ச்சி பிறக்கிறது. மகிழ்ச்சி வெள்ளம் கிடைக்கிறது என அவர் பேசினார்.
