சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், திமுக அரசை கடுமையாக சாடினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளன.
அமித்ஷா அழைப்பின் பேரிலே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கார்கள் மாறி அமித்ஷாவை சந்தித்தும், முகமூடி அணிந்து வெளி வந்ததையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அந்த அமித்ஷா சொல்வதை மீறி எதையுமே எடப்பாடி பழனிசாமியால் செய்ய முடியாது என்பது அதிமுகவினருக்கே நன்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகிறார்கள். அதற்காக அமித்ஷாவை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாத தொடைநடுங்கி எடுபுடி பழனிசாமிக்குதான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் என்பது மிக சிறந்த நகைச்சுவை.
பாஜகவின் மதவெறி கொள்கைக்கு எதிரியாக இருப்பது திமுக மட்டுமல்ல தமிழ்நாடே என்பதால் தமிழ்நாட்டுக்கு துரோகத்தையும் வஞ்சகத்தையுமே மட்டுமே ஒன்றிய பாஜக அரசு துணிந்து செய்கிறது. அப்படியிருந்தும் பாஜகவுடன் கூட்டணிவைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள் என கூறியுள்ளார்.
