“போர் நிறுத்தம்” என்று ஓங்கி ஒலித்த குரல் அமெரிக்காவின் பக்கமிருந்து வந்ததையடுத்து உக்ரைன் போர் கிட்டத்தட்ட முடிவை நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால் இந்த போரை ஒரு விதத்தில் தொடங்கி வைத்தது அமெரிக்காதான். எப்படியெனில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய வேண்டும் என்று விரும்பியதால் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.
ரஷ்யா உக்ரைனின் அண்டை நாடு என்பதால் இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. அதாவது இந்தியா-பாகிஸ்தான் போல ரஷ்யாவும் உக்ரைனும் எல்லைகளை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்து, நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையில் நிலை நிறுத்தப்பட்டால் அது புதினுக்கு பெரிய தலைவலியாக மாறிவிடும்.
எனவே நேட்டோ திட்டத்தை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று புதின் உக்ரைனை வலியுறுத்தினார். ஆனால் Zelensky இதனை காதில் கூட வாங்கிக்கொள்ளவில்லை. அந்த சூழ்நிலையில் தான் கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா போரை அறிவித்தது. ஒரு சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நிலைமை தலைகீழானது. சிறிய நாடான உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. இவை எல்லாம் பைடன் அதிபராக இருந்த நாட்களில் தான்.
ஆனால், டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் போர் நிறுத்தம் கைகூடி வந்துள்ளது. இந்நிலையில் டிரம்ப் புதினுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது இப்போது சண்டை நடந்துக்கொண்டிருக்கும் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் வீரர்களை கொல்லாமல் பத்திரமாக உக்ரைனிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பதிலளித்துள்ள புதின் உக்ரைன் படைகள் சரணடைந்தால், அவர்கள் பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் நடத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.