‘பிரதமர் மோடிக்கு தைரியமில்லை!’ ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டு!

பிஹார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.

நாளந்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ‘பிஹாரில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மாநிலத்தின் சுகாதார அமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும், பொதுமக்களின் நிலங்கள் கூட இங்கு பாதுகாப்பாக இல்லை; அவை அனைத்தும் குறைந்த விலையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,’ எனக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: ‘கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு மோசடி மூலம் தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை ஒழிக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். இந்தியாவின் அடிப்படை மதிப்புகளை தகர்க்கும் செயல்களில் பிரதமர் நேரடியாக ஈடுபட்டுள்ளார்,’ என்றார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியவர் தான்’ என்று பல முறை கூறியிருப்பதை நினைவூட்டிய ராகுல் காந்தி, ‘அந்தக் கூற்றை மறுக்கும் தைரியம் நமது பிரதமருக்கு இல்லை’ என சாடினார்.

பிஹாரில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கான அரசாக இருக்கும் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ‘உலகத் தரத்திலான பல்கலைக்கழகம் நாளந்தாவில் அமைக்கப்படும்,’ எனவும் அவர் உறுதியளித்தார்.

Related News

Latest News