திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், தென்றல் நகரை சேர்ந்தவர் சாமுவேல். இவர் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே மருந்தகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு மருந்தகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று மீண்டும் காலை மருந்தகத்தை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார்.
பின்னர் கடையை திறந்து ஏதாவது திருடப்பட்டு இருக்கிறதா என சோதித்த பார்த்தபோது விற்பனை முடிந்து வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
திருட்டு சம்பவம் தொடர்பாக கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத ஒருவர் மருந்து வாங்குவது போல கடையை நோட்டமிட்டு கடையின் உரிமையாளரிடம் பேச்சுக்கொடுக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மேலும் அதே நபர் நள்ளிரவில் கடையிலிருந்து வெளியே செல்லும் நிகழ்வும சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பதால் அந்த நபர் தான் பணத்தை கொள்ளை அடித்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வரை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
