Friday, December 27, 2024

சமூகநீதிக்கு எதிரானதா 10% இட ஒதுக்கீடு? தீர்ப்புக்கு எழும்பிய எதிர்ப்பும் ஆதரவும்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்க, அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தம் செல்லும் என நவம்பர் 7ஆம்  தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் தினேஷ் மகேஸ்வரி, பிலா திரிவேதி, பர்திவாலா ஆகிய மூவரும் இட ஒதுக்கீட்டை ஆதரித்து இந்த தீர்ப்பை சாத்தியமாக்கி உள்ள நிலையில், அமர்வில் இருந்த ரவீந்திர பட் என்ற நீதிபதி இந்த சட்ட திருத்தம் சமூகநீதியின் கட்டமைப்பையும் அதன் அடிப்படை கட்டமைப்புகளையும் குறை மதிப்பீடு செய்வதாக கூறி எதிராக தீர்ப்பளித்தார்.

தலைமை நீதிபதி யு.யு.லலித்தும் ரவீந்திர பட்டின் தீர்ப்புடன் ஒத்து போவதாக கூறினாலும் பெரும்பான்மை முடிவே இறுதி தீர்ப்பானது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் இந்த தீர்ப்பை பின்னடைவாக கருத வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், சமூக நீதிக்கு எதிரானதான, முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுதே முன்னெடுத்த முயற்சி என்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள பா.ஜ.,வின் பொதுச் செயலர் பி.எல். சந்தோஷ், இந்த தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு முயற்சியை உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு பிராமண சங்க தலைவர் என்.நாராயணன், வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை தங்கள் சங்கம் வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு இப்படி எதிர்ப்பும் ஆதரவும் கிளம்ப பிராமணர்கள், ராஜ புத்திரர்கள், மராத்தா, ஜாட் பிரிவினர், வைசியர், பனியாக்கள், காயஸ்தர்கள் என வட இந்தியாவில் மட்டும் இருக்கும் 18 சதவீத மக்களை குறிவைத்து நடத்தப்படும் வாக்கு வங்கி அரசியல் யுக்தியாகவே இதை பார்ப்பதாக இடதுசாரி அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news