கோவாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, ஜூன் 3-ம் தேதி காலை 10.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
‘மேக் இன் இந்தியா’ மற்றும் ஆத்மநிர்பர் பாரத் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மும்பை – கோவா வழித்தடத்தில் இணைப்பை மேம்படுத்தி, அப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும் வசதியுடனும் பயணிக்க வழிவகை செய்யும். . இந்த ரயில் நாட்டில் இயக்கப்படும் 19வது வந்தே பாரத் ரயிலாகும்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் ரயில் நிலையம் இடையே இந்த ரயில் இயக்கப்படும். இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இது ஏறக்குறைய ஏழரை மணி நேரத்தில் பயணத்தை உள்ளடக்கும், இது ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில், உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இரு மாநிலங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்தும்.