கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகிலுள்ள ஏச்சன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதேவன். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு அஞ்சனா (17) என்ற மகள் உள்ளார். அஞ்சனா பிளஸ்-2 வகுப்பில் படித்து வந்தார்.
கேரளத்தில் கடந்த 5ஆம் தேதி முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கியதிலிருந்தே அஞ்சனா மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சில பாடங்களின் தேர்வுகளை எழுதுவதற்கு அவர் பயம் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த நாளில் வேதியியல் பாடத் தேர்வு நடைபெற இருந்தது. அன்று காலை நீண்ட நேரமாகியும் அஞ்சனா தனது அறையிலிருந்து வெளியே வராததால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அஞ்சனா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த வாளையார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
