பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களின் பேக்கிங் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வர, Food Safety and Standards Authority of India (FSSAI) ஒரு புதிய வரைவு திருத்த மசோதாவை வெளியிட்டுள்ளது. இந்த மசோதா, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் விதிமுறைகள் (2018) சட்டத்தில் மாற்றங்களை முன்வைக்கிறது.
இந்த மாற்றத்தின் படி, பான் மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக அலுமினியம் ஃபாயில், பாலிஎத்திலீன், பாலியஸ்டர், பாலிபுரோபைலின் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட கூடாது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பையும், சுகாதார ஆபத்துகளையும் குறைப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது.
அதற்கு பதிலாக, இயற்கை முறையில் கிடைக்கும் காகிதம், காகித அட்டைகள் மற்றும் செல்லுலோஸ் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பேக்கிங்கிற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அட்டவணை நான்கில் உள்ள உணவு பேக்கிங் விதிகளில் மாற்றம் செய்து, எந்த பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பொருட்களை சேமிக்க, பேக் செய்ய மற்றும் விற்பனை செய்ய பயன்படும் அனைத்து நெகிழி பொருட்களுக்கும் முழுமையான தடை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி பங்குதாரர்களுக்கு FSSAI அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பாக, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தமிழ்நாடு , கேரளா, மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
