கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு கோரி மனு அளிக்க திட்டம்!!

கடந்த 27-ந் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் கூறாமல் இருந்து வந்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் விஜய் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை ‘வீடியோ கால்’ மூலம் தொடர்பு கொண்டு நேற்று முன்தினமும், நேற்றும் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, பேசிய விஜய்; இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும். நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என்று தனது ஆறுதலை தெரிவித்தார்.

இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் தெரிவிக்க த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளிக்க உள்ளதாக கட்சியின் கொ.ப.செ. அருண்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே நேற்று mail மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related News

Latest News