பருவநிலை மாற்றம் ஒரே இரவில் நடக்கும் நிகழ்வல்ல. எனினும், எப்போதும் இல்லாத வகையில் கடந்த நூற்றாண்டில் அதிகரிக்க துவங்கிய வெப்ப நிலையும் அதனால் சுற்றுச்சூழலில் நடக்கும் எதிர்மறையான விளைவுகளும் அச்சுறுத்தலாக நிலவி வருகின்றன.
பெருகி வரும் மக்கள் தொகை, அதிகமான எரிபொருள் பயன்பாடு, அதீத தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் க்ரீன் ஹவுஸ் வாயுவின் தாக்கத்தினால் ஏற்படும் கூடுதல் வெப்பத்தின் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
இந்நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் கடலுக்குள் முழுக இருக்கும் முக்கிய நகரங்களின் பட்டியல் ஆய்வு அறிக்கையாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இந்தோனேசியாவின் ஜகார்ட்டா, அமெரிக்காவின் நியூ யார்க் மற்றும் மையாமி, இத்தாலியின் வெனிஸ், பங்களாதேஷின் தாக்கா, நெதர்லாண்ட்ஸின் ராட்டர்டேம், நைஜீரியாவின் லாகோஸ், மற்றும் தாய்லாந்தின் பாங்காக் ஆகிய நகரங்கள் இடப்பெற்றுள்ளன.
இவற்றில் ஏற்கனவே வருடத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வரை கடலுக்குள் இறங்கும் பாங்காக் அதிக ஆபத்தில் இருப்பதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், சரியான நீர் மேலாண்மை செய்யாதது கூடுதல் காரணியாக அமைந்து பங்களாதேஷ், 2050ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மறைய நேரிடும் என எச்சரிக்கின்றனர்.