Thursday, January 15, 2026

மணமகனின் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு ; காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் – சோழவந்தான் சாலையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அஷ்வந்த் (25). திருமங்கலம் பழனியாபுரத்தைச் சேர்ந்த கவிராஜன் என்பவரின் மகள் அனிதா (23). இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இந்த காதல் திருமணத்தை அனிதாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதன் காரணமாக இரு குடும்பங்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அனிதா பெற்றோருடன் செல்ல மறுத்து கணவர் வீட்டிற்கே சென்றுவிட்டார். இதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரையில் இருந்து திருமங்கலத்திற்கு சென்ற போது மருமகன் அஷ்வந்தின் வாகனத்தை கவிராஜன் வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரவு 11 மணி அளவில் திருமங்கலம் எட்டுபட்டரை மாரியம்மன் கோவில் அருகே உள்ள அஷ்வந்தின் சகோதரி பிரியதர்ஷினியின் வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக, மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை வீசி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து செல்வம் திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News