கொஞ்சம் கூட இரக்கம் காட்டாத தங்கம்! 9 காரட் நகைகளை குறி வைக்கும் மக்கள்

சென்னையில் கடந்தாண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59,000க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்க விலை வேகமாக உயர்ந்து, கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்நிலையில் இன்று அதிராடியாக கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ரூ.11,825-க்கும், சவரனுக்கு ரூ.1960 அதிகரித்து ரூ.94,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் நிலையில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என வியாபாரிகள் கணிக்கின்றனர். இதனால் சாதாரண மக்களின் கவனம் தற்போது குறைந்த விலையில் கிடைக்கும் 9 காரட் தங்க நகைகளின் பக்கம் திரும்பியுள்ளது.

9 காரட் தங்க நகைகளுக்கு மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையை வழங்கி அங்கீகரித்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு சவரன் நகை ரூ.32,000 என்ற குறைந்த விலையிலே கிடைப்பதாகும். ஆனால் இதற்கும் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி போன்ற கூடுதல் கட்டணங்கள் அமலிலேயே இருக்கும்.

9 காரட் தங்கத்தில் 37.5% மட்டுமே தூய தங்கம் உள்ளது. மீதமுள்ள பகுதி செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்களாகும். இதனால் 18 அல்லது 22 காரட் தங்கத்தை விட இதன் விலை குறைவாக இருக்கும்.
தங்க விலை அதிகரிப்பால் குறைந்த பட்ஜெட்டில் தங்கம் வாங்க விரும்புவோருக்கு இது சிறந்த மாற்றாகும். மேலும், BIS நிறுவனம் 9 காரட் தங்கத்துக்கும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கியதால், இந்நகைகளை மறுவிற்பனை செய்யவும் அல்லது அடகு வைக்கவும் வசதி உண்டு.

நகை விற்பனையாளர்கள் கூறுவதாவது, 9 காரட் தங்க நகைகள் தற்போது மக்களிடையே விருப்பம் பெறுகின்றன. பண்டிகை சீசனில் தங்கம் வாங்க நினைப்போருக்கு இது பொருத்தமான மற்றும் கையை கடிக்காத தேர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News