திருப்பத்தூர் அருகே “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜலால் நகர் பகுதியில், முதல் நான்கு வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டதால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். மேலும் முதியோர் பெண்கள் குழந்தைகள் என பலரும் குடிநீர், கழிவறை ,காற்றோட்டம் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல், தங்களது மனுக்களை அளிக்க டோக்கன் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததால், டோக்கன்களை பெறுவதற்காக பொதுமக்கள் முண்டியடித்து வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் துறையினரும் நகராட்சி பணியாளர்களும் திணறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.