வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதிகாலையில் புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் – பாபட்லா இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவானதன் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அர்னாப் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரக் கடலோரப் பகுதியில் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
