தமிழகத்தில் அக்டோபர் 16ம் தேதி தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆகையால், நீர் நிலைகள் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இம்மதமான நவம்பர் மாதம் தொடக்கத்திலேயே வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மழை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
