சென்னையை சுத்தமாக, சுகாதாரமாக மற்றும் வண்ணமயமாக ஆக்கும் தமிழக அரசின் சிங்காரச்சென்னை திட்டம், தற்போது புதுப்பொலிவுடன் சிங்காரச்சென்னை 2.0 என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சென்னையை மெருகேற்றும் பணியில் பல கலைஞர்கள் ஈடுபட்டு இருந்தாலும், கௌஷிகா என்ற பெண்ணின் தலைமையில் இயங்கும் குழு, அவர்களின் தனித்துவமான படைப்புகளினால் தனி கவனம் ஈர்த்துள்ளனர்.
ஏற்கனவே கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம், சூளைமேடு பகுதிகளை சீரமைத்து, தங்கள் ஓவியங்களால் அழகுபடுத்தியுள்ள கௌஷிகா குழுவினர், தற்போது சைதாப்பேட்டை பகுதியில் ஓவியத்தோடு சேர்த்து, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நேரும் வன்முறை மற்றும் ஆணாதிக்க சமூகம் சார்ந்த கட்டமைப்பால் நிகழும் அடக்குமுறைகளுக்கு எதிரான குரலாக தங்கள் ஓவியங்களை பதிவு செய்துள்ளனர்.
‘எக்கரை எனது?’, ‘படிக்கவா வேணாமா’, ‘வடுக்களும் வலிக்கிறது’, ‘நான் விற்பனைக்கு அல்ல’, ‘கேடுகெட்ட வார்த்தைகள்’ என ஒவ்வொரு ஓவியமும் அதனுடன் இடம்பெற்றுள்ள சொற்றோடர்களும் சமூகத்துக்கு நினைப்பூட்டி கொண்டே இருக்க வேண்டிய பெண்ணியத்தை பேசுவது கூடுதல் சிறப்பு.
அழகுக்காக மட்டும் ஓவியம் வரையாமல், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கருப்பொருளை சுற்றி சமூக நலன் சார்ந்த கருத்துக்களை செதுக்கி கௌஷிகாவும் அவர் குழுவும் ஒரு ஓவிய புரட்சியை செய்து வருகின்றனர் என சொன்னால் மிகையாகாது.
https://www.instagram.com/reel/Cf4LopfJsEX/?utm_source=ig_web_copy_link