Wednesday, February 4, 2026

கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்., மாடியில் இருந்து குதித்த 3 சிறுமிகள், சிக்கிய கடிதம்

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த மூவரும் கொரியன் வீடியோ கேம்களுக்கு அதிகமாக அடிமையாகியிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் எப்போதும் செல்போன்களை கையில் வைத்துக்கொண்டு வீடியோ கேம்களில் மூழ்கியிருந்ததால், பெற்றோர் அவர்களை கடுமையாக கண்டித்து, இனி வீடியோ கேம் விளையாடக் கூடாது என தடை விதித்துள்ளனர்.

இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனமுடைந்த மூன்று சிறுமிகளும், வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

அப்போது மூவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். பின்னர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் சிறுமிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறுமிகள் உயிரிழப்பதற்கு முன் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், “இந்தக் கடிதத்தை முழுவதுமாக படியுங்கள். அப்பா, எங்களை மன்னித்து விடுங்கள். கொரியன் கேம்களை விட்டு எங்களால் வெளியே வர முடியவில்லை. கொரியா தான் எங்களின் வாழ்க்கை. அது இல்லாமல் எங்களால் இருக்க முடியாது. எங்களின் வாழ்க்கையை நாங்கள் முடித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், சிறுமிகளின் உயிரிழப்புக்கு வீடியோ கேம் அடிமைத்தனம் முக்கிய காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related News

Latest News