Monday, February 16, 2026

தீ பரவியதா ? பராசக்தி படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ..!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று ஜனவரி 10 ந் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதால் சிக்கல் ஏற்பட்டு படத்தில் 52 இடங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் மியூட் செய்யப்பட்டு இன்று வெளியாகி உள்ளது.

பராசக்தி படம் எப்படி இருக்கு?

மாணவர் புரட்சி படையை நடத்தி வரும் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அத்தகைய ஒரு போராட்டத்தின் போது, சிவகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஒரு ரெயிலை வழிமறித்து தீ வைக்கிறார்கள். அந்த ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ரவி மோகனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கடும் மோதல் ஏற்படுகிறது. அந்த சண்டையில் ரவி மோகனின் ஒரு விரல் துண்டிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போராட்டத்தின் போது தனது உயிர் நண்பனை இழந்த சிவகார்த்திகேயன், அதே நாளில் இருந்து போராட்டப் பாதையை முழுமையாக கைவிடுகிறார். அதே நேரத்தில் நடந்த சம்பவத்திற்காக சிவகார்த்திகேயனை பழிவாங்க ரவி மோகன் காத்திருக்கிறார்.

சில ஆண்டுகள் கழித்து, சிவகார்த்திகேயனின் தம்பியான அதர்வா, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் குதிக்கிறார். தம்பி போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க சிவகார்த்திகேயன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? போராட்டம் திட்டமிட்டபடி நடந்ததா? சிவகார்த்திகேயனும் ரவி மோகனும் மீண்டும் சந்தித்தார்களா? என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக கதை நகர்கிறது.

இதுவரை காதல் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்த சிவகார்த்திகேயன், முதல் முறையாக புரட்சிப் போராட்டம் சார்ந்த கதாபாத்திரத்தில் கவனிக்க வைக்கிறார்.

இதுவரை நாயகனாக நடித்துவந்த ரவி மோகன், இந்த படத்தில் முதல் முறையாக வில்லனாக தோன்றி மிரட்டுகிறார். அதர்வா நடிப்பிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக கலக்குகிறார். ஸ்ரீலீலா அழகும் நடிப்பும் கலந்து கவனம் ஈர்க்கிறார்.

ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், வலுவான திரைக்கதை அவற்றை மறக்கடிக்கிறது.

உண்மை சம்பவங்களை நினைவூட்டும் வகையில், பரபரப்பான கதைக்களத்தில் காட்சிகளை நகர்த்தி, இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் ஒருமுறை தனது இயக்க முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்.

Related News

Latest News