Saturday, May 17, 2025

பாகிஸ்தானுக்கு அடுத்த ‘செக்’ ! தாலிபானுடன் கை கோர்க்கும் இந்தியா!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தாலிபான் ஆட்சியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இது முதல் முறையாக இந்தியா, தாலிபான் நிர்வாகத்துடன் நேரடி உரையாடலில் ஈடுபடுவதாகும்.

இந்த உரையாடல், இருநாட்டு உறவுகள் வளர்ச்சிக்கும், நலன்களுக்கும் ஒரு முக்கிய தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் 26 பேர் பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவம், இந்தியாவையே உலுக்கியிருந்தது. இந்த தாக்குதலுக்கு தாலிபான்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை ஜெய்சங்கர் நேரடியாக பாராட்டியுள்ளார்.

இதே நேரத்தில், இந்த கலந்துரையாடல் மூலம் இந்தியா, ஆப்கானிஸ்தான் மக்களுடன் நட்பு உறவை நிலைநாட்டத் தங்கள் ஆதரவைத் தொடரும் எனவும், இருநாட்டுக்கிடையேயான வர்த்தகம், துறைமுக மேம்பாடு, விசா வழங்கல் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பேசப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தாலிபான் தரப்பிலிருந்து, இந்தியா செல்லும் ஆப்கான் மக்களுக்கு மேலும் விசா வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ உதவிக்காக இந்தியா நாடுபவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்த விரிவாக்கம் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் சபாஹர் துறைமுக விவாதம் மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியதைத் தொடர்ந்து, ஆப்கானுக்கு இடைமுகமாக உள்ள ஈரானின் சபாஹர் துறைமுகமே முக்கிய நுழைவாயிலாக உள்ளது. அதையும் மேம்படுத்தும் முன்மொழிவு நடந்துள்ளது.

இந்தியாவுடன் வர்த்தகத்தில் தொடர விரும்பும் தாலிபான், பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பும் தவறான தகவல்களை எதிர்த்து, இருநாட்டு உறவை நிலைநாட்டும் முயற்சியில் இருக்கிறது.

இந்த உரையாடல், இந்தியா – ஆப்கான் உறவின் புதிய பரிமாணத்தை உருவாக்கும் ஒரு முக்கியமான கட்டமாகவே பார்க்கப்படுகிறது.

 இதுதான் தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப் படுகிறது… இதை முன்னிட்டு எதிர்காலத்தில் இருநாட்டுக்கிடையேயான உறவு எந்தபக்கம் செல்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

Latest news