பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, கடைசி நேரத்தில் சுக்குநூறாக உடைந்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவோம் என்று கனவு கண்ட பாகிஸ்தானின் முயற்சியும், அதன் ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் திட்டங்களும் ஏன் தோல்வியடைந்தன? இதற்குப் பின்னால் ஈரான் சுமத்தும் ‘இரட்டை வேட’ குற்றச்சாட்டுகள், உலக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. ஈரான் தரப்பு, பாகிஸ்தானை ஒரு நடுநிலையான மீடியேட்டராகக் கருதவில்லை என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.
குறிப்பாக, கடந்த வாரம் ஆசிம் முனீர் தெஹ்ரானுக்குச் சென்றபோது, ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள முற்றுகையை நீக்குவதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்த ஈரானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டித்தாரே தவிர, முற்றுகையை நீக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? ஆசிம் முனீர் அமெரிக்காவின் சொல்படி நடக்கிறாரா? என்ற சந்தேகங்கள் ஈரானுக்கு வலுக்கத் தொடங்கியுள்ளன.
இந்தக் குழப்பத்திற்குப் பின்னால் பல கசப்பான உண்மைகள் ஒளிந்துள்ளன. பாகிஸ்தான், ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவின் 15 முதல் 16 கூடுதல் நிபந்தனைகளை ஈரானின் மீது திணிக்க முயற்சி செய்ததாக ஈரான் அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு மீடியேட்டராகச் செயல்பட வேண்டிய பாகிஸ்தான், அமெரிக்காவின் கருவியாகச் செயல்படுகிறது என்பதுதான் ஈரானின் கோபத்திற்கு முக்கியக் காரணம்.
லெபனான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோதும், ஈரானின் கப்பல்களை அமெரிக்கா கடலில் சிறைபிடித்தபோதும், மீடியேட்டராக இருந்த பாகிஸ்தான் மௌனம் காத்தது. இந்த அமைதி, ஈரான் தரப்பில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைப்பது, மறுபக்கம் அமெரிக்காவின் அத்துமீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது என பாகிஸ்தானின் அணுகுமுறை மிகவும் ‘சார்பு’ உடையதாக இருந்ததாக ஈரான் கருதுகிறது.
இறுதியில், பாகிஸ்தானின் மீடியேட்டர் அந்தஸ்து கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்விக்கு, ட்ரம்பின் நிலையற்ற முடிவுகள் ஒரு காரணம் என்றால், பாகிஸ்தானின் நம்பகத்தன்மையற்ற போக்கும் மற்றொரு முக்கியக் காரணம். ஒரு பக்கம் பாகிஸ்தான் பிரதமர், ஆசிம் முனீர் மற்றும் அவர்கள் நிர்வாகம், தங்களை நவீன ராஜதந்திரத்தின் நாயகர்களாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.
ஆனால், களத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தேவையான தீர்வுகளை விட, ஈரானை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணிய வைக்கவே பாகிஸ்தான் முயன்றது என்பதுதான் ஈரானின் பார்வை. இன்று ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. சர்வதேச அளவில் ‘ட்ரிக்க்’ (Dirty tricks) செய்வதில் பெயர் பெற்ற பாகிஸ்தானால், பெரிய வல்லரசுகளுக்கு இடையே உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்பதை இந்தத் தோல்வி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
