இந்திய ஏவுகணைகளால் நடுங்கும் பாகிஸ்தான்! சீனாவிடம் கையேந்தும் பின்னணி என்ன?

இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போயுள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 முதல் மே 10 வரை இந்திய முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது சம்மட்டி அடி கொடுத்தன.

அந்தத் தாக்குதலின் போது பாகிஸ்தான் பயன்படுத்திய சீனத் தயாரிப்பான ‘எச்க்யூ-9பி’ (HQ-9B) வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் வேகத்திற்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து போயின. குறிப்பாக, ஐந்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய ராடார்கள் அழிக்கப்பட்டதால், இந்தியாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறிப் போனது.

மறுபுறம், இந்தியாவிடம் உள்ள ரஷ்யத் தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு சிஸ்டம், பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அழித்து இந்தியாவிற்கு ஒரு கவசமாக நின்றது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான், இப்போது ‘எஸ்-400’ சிஸ்டமிற்கு இணையாகக் கருதப்படும் சீனாவின் அதிநவீன ‘எச்க்யூ-19’ (HQ-19) வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கச் சீனாவிடம் கையேந்தி நிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் மிகவும் மேம்பட்ட இந்தத் தொழில்நுட்பம், அமெரிக்காவின் ‘தாட்’ (THAAD) ஏவுகணை அமைப்பிற்கு இணையானது எனக் கூறப்படுகிறது. இது ஆயிரம் முதல் மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.

இந்த எச்க்யூ-19 சிஸ்டமின் மிக முக்கியமான தனித்துவம் என்னவென்றால், ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாகப் பாயும் ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளைக் கூட இது துல்லியமாகத் தாக்கி அழிக்கும். சுமார் 12 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் எப்படியாவது எட்டத் துடிக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், சவுதி அரேபியாவுடன் செய்துள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு இதனை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் இந்த ராணுவக் கூட்டணி இந்தியாவிற்கு ஒரு முக்கிய எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீனாவிடம் இருந்து 40 ஸ்டெல்த் போர் விமானங்கள் மற்றும் வான்வழி எச்சரிக்கை விமானங்களை வாங்கப் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், பாகிஸ்தானின் இந்த நவீன ஆயுதக் குவிப்பு தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் வான்வழி ஆதிக்கத்தை முறியடிக்கப் பாகிஸ்தான் எடுக்கும் இந்த அதிரடி முயற்சிகளை இந்தியப் பாதுகாப்புத் துறை மிகுந்த கவனத்துடன் உற்று நோக்கி வருகிறது.

Related News

Latest News