சிதறிக்கிடந்த உடல்கள்… சிதைந்து போன குடும்பங்கள்… சுக்குநூறாகிவிட்ட இதயங்கள்… சின்னாபின்னமான இந்தியா பாகிஸ்தான் அமைதி… இவை எல்லாவற்றிற்கும் காரணமாய் இருந்த ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எடுத்த நெற்றியடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் திணற ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே பணவீக்கத்தால் என்ன செய்வது என்று விழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தானுக்கு நீர்வரத்தை நிறுத்தியதால் அந்நாடு திக்குமுக்காடுகிறது. அது மட்டுமில்லாமல் இந்தியா-பாகிஸ்தான் இடையே அட்டாரி-வாகா எல்லையை இந்தியா அடைத்திருப்பதால் தரை மார்க்கமாக நடைபெற்று வந்த ரூபாய் 3 ஆயிரத்து 800 கோடி மதிப்புள்ள வர்த்தகம் ஸ்தம்பித்திருக்கிறது.
மேலும் சமீப நாட்களாகவே பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் இருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், ரசாயனங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் தடைப்பட்டுள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி 686.2 பில்லியன் டாலர்களாக இருக்கும் அதே நேரத்தில் பாகிஸ்தானிடம் 15.75 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்று தரைதட்டிவிட்ட நிலையில் இறக்குமதி செய்யக்கூட பாகிஸ்தானிடம் பணம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொருளாதாரம் நிலைகுலைந்து பங்குச் சந்தை சரசரவென சரிந்துவிட்டது.
குறிப்பாக கராச்சி பங்குச் சந்தை கபளீகரமாகியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிந்ததால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் பணவீக்கம் உச்சம் தொட்டுவிடும். ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு பாட்டில் தண்ணீரின் விலை தற்போது 105 ரூபாய். நிலைமை இப்படி சறுக்கலில் இருக்கும்போது சிந்து நதிநீர் ஒப்பந்த முறிவு நீடிக்கும் பட்சத்தில் தண்ணீரின் விலை மேலும் அதிகரிப்பதோடு எல்லா திசையிலும் பாகிஸ்தானுக்கு மரண அடி விழுவதால் அந்நாடு மூச்சு திணறும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.