ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், 200 தாலிபான்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பும் தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி நடவடிக்கையாக, ஆப்கான் படைகள் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள சாகாய் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தின. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மூடப்பட்டன.
ஆப்கான் படைகள் பாகிஸ்தானின் 25க்கும் மேற்பட்ட ராணுவ நிலையங்களை கைப்பற்றியதாக அறிவித்துள்ளன. நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இடைமறித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இந்நிலையில், 58 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் நேரடி மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், 200 தாலிபான்கள் மற்றும் பிற ஆயுதப்படை வீரர்களை கொன்று குவித்ததாகவும், ஆப்கானிஸ்தானின் 19 ராணுவ நிலையங்களை கைப்பற்றியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதுபோல், ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், இரு தரப்புகளும் வெளியிட்ட உயிரிழப்புக் கணக்குகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. எல்லைப்பகுதிகளில் பதற்றம் நீடிக்க, சமாதான முயற்சிகள் தொடர்கின்றன.
