வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இனி கவலையில்லை! பணம் அனுப்புவதை விரைவுபடுத்த நடவடிக்கை!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பணம் அனுப்பும் செயல்முறையை மேலும் எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும், குறைந்த சிக்கலுடன் மேற்கொள்வது ஜி20 நாடுகளின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். இந்தியாவும் அதனுடன் இணைந்து பணப்பரிமாற்ற செயல்திறனை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 2025 நவம்பர் 19ம் தேதி வரை வங்கிகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி வரவேற்கிறது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் பயனாளியின் கணக்கில் சேரும் நேரத்தை குறைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பணப் பரிமாற்றத்தின் வேகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று, பணம் பெறப்பட்ட பின்பு அது பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை எடுத்துக்கொள்ளும் நேரம் என்பதாகும். இதனை சரிசெய்ய, வங்கிகள் தங்களது உள்நாட்டு செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி, பணம் செலுத்தப்பட்டதற்கான தகவலை துல்லியமாகவும் உடனுக்குடன் தெரிவிக்கவும் வேண்டுமென ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்தால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்பும் முறை மேலும் வேகமானதும், நம்பகமானதும், வெளிப்படையானதுமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News