Monday, January 19, 2026

சுவாச நோய்களால் டெல்லியில் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பு : வெளியான ஷாக்கிங் தகவல்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய புள்ளிவிவரங்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் அடிப்படையில், கடந்த ஒரே ஆண்டில் சுவாசம் தொடர்பான நோய்களால் 9,211 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட சுமார் 4.6 சதவீதம் அதிகமாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

டெல்லியில் நிலவும் நச்சு கலந்த காற்று மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் கடும் பனி போன்ற சூழல், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலை கடுமையாக பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

டெல்லியில் தினமும் சராசரியாக 381 இறப்புகள் பதிவாகும் நிலையில், சுவாச நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது பொதுச் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related News

Latest News