பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் அங்கு கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்தது நீதிமன்ற வளாகத்துக்குள் என்பதால், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு மீதான கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் அரசு இதன் பின்னணியில் தாலிபான்கள் இருக்கலாம் என சந்தேகிக்கிறது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாவது, ‘இது ஒரு எச்சரிக்கை. பாகிஸ்தான் இப்போது உண்மையான போர் நிலையில் உள்ளது. இந்தப் போர் ஆப்கான் எல்லை அல்லது பலுசிஸ்தான் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை; இஸ்லாமாபாத் வரை விரிந்துவிட்டது,’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ‘பாகிஸ்தான் ராணுவம் ஒவ்வொரு நாளும் மக்களைப் பாதுகாக்க தியாகம் செய்கிறது. ஆனால் தாலிபான் ஆதரவில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்க ஆப்கான் ஆட்சியாளர்களால் மட்டுமே முடியும். இதற்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு போதுமான வலிமை உள்ளது’ என்றார்.
பலுசிஸ்தான் மற்றும் எல்லைப்பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் நடைபெற்றுவரும் நிலையில், தலைநகரத்துக்கே இப்போது பயங்கரவாதம் நுழைந்திருப்பது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியளித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
