Tuesday, January 13, 2026

ஆர்டர் கொடுத்தது ஆப்பிள் ஐபோனுக்கு; வந்தது நிர்மா சோப்!

ஆப்பிள் ஐபோன் ஆர்டர் கொடுத்த நபருக்கு நிர்மா சோப் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Big Billion Days Sale பெயரில் சில மாதங்களுக்குமுன் Flipkart தள்ளுபடி விலையில் ஆப்பிள் போனை விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. அந்தக் கவர்ச்சியான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட சிம்ரன்பால் சிங் என்னும் வாடிக்கையாளர் 53 ஆயிரம் மதிப்புள்ள Apple iphone12 போனுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார்.

மலிவான விலையில் உயர்தரமான செல்போன் கிடைக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியோடு காத்திருந்தார். அந்த ஆவல் நிறைவேறும் நாளும் வந்தது. அவரது வீட்டு வாசலுக்கு டெலிவரி நபர் ஒருவர் வந்தபோது சிம்ரன்பால் சிங் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்த மகிழ்ச்சிப் பெருக்கோடு தனக்கு வந்த பார்சலைப் பிரிக்கத் தொடங்கினார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

பார்சல் முழுவதும் பிரித்துப் பார்த்த சிம்ரன்பால் சிங்கின் முகம் சுருங்கிப்போனது. காரணம், அவர் பார்சலில் கண்டது இரண்டு பார் நிர்மா சோப். பல ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்த செல்போனுக்குப் பதிலாக நூறு ரூபாய் மதிப்புகூட பெறாத சோப் இருந்ததைக் கண்டு சிம்ரன்பால் சிங் வெறுத்தே போனார்.

அதேசமயம், பார்சலை டெலிவரி செய்த நபரிடமிருந்து அதனைப் பெற்றுக்கொண்டதற்கான OTPஐ சொல்ல மறுத்துவிட்டார்.

மேலும், பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் சிம்ரன்பால் சிங்கின் செல்போன் ஆர்டரை ரத்து செய்தது. அவர் செலுத்தியிருந்த பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டது.

ஆன்லைனில் பொருட்களுக்கு ஆர்டர் செய்யும்போது இதுபோன்ற தவறுகள் சிலசமயங்களில் ஏற்பட்டாலும், பொருளைப் பெற்றுக்கொள்ளும்முன் சரிபார்த்துக்கொள்வது வாடிக்கையாளரின் கடமையாகும்.

சலுகை விலையில் கிடைக்கிறது என்பதற்காகவும், சோம்பல் காரணமாகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கக்கூடாது என்பதே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Related News

Latest News