`வெறும் 34 லட்சம் ரூபாய்தாங்க..!’ பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள்

178
Advertisement

பள்ளி மாணவர்களின் குறும்புகளுக்கு அளவே கிடையாது.

அவர்கள் விளையாட்டுத்தனமாகச் செய்பவை, பல நேரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிடுவதுண்டு. அந்த வகையில், அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் சிலர், தங்களின் பள்ளியை 34 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள (Maryland) மீட் உயர்நிலைப் பள்ளி (Meade High School) மாணவர்கள் சிலர், ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளியை விற்கும் விதமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தை ஒருவர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த விளம்பரத்தில், `இதுவொரு நல்ல பகுதிநேரச் சிறைச்சாலை. மொத்தமாக இதிலிருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்னை இருக்கிறது. அதேசமயம், இங்கு நல்ல சமையலறை, உணவருந்தும் அறை உட்பட தனியாகக் கூடைப்பந்து அரங்கும் இருக்கிறது.

மேலும், இங்கு உங்களின் சொந்தக்காரர்களான எலிகள், பூச்சிகள் உங்களை அலறவைக்கும்" என்று குறிப்பிட்டு,இதன் விலை 42,069 டாலர்’ அதாவது இந்திய மதிப்பில் 34 லட்சம் ரூபாய் என மாணவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். பள்ளி மாணவர்களின் இத்தகைய குறும்புச் செயலுக்கு இணையதளவாசிகள் பலரும் தங்களது பதில் கருத்தைப் பதிவிட்டுவருகின்றனர்.