தெலங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் பெயரில், 500க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200க்கும் அதிகமான தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் அந்த பகுதியில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, போட்டியிட்ட வேட்பாளர்கள் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், தெரு நாய்களை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபோலவே, அனுமக்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களை கொன்றதாக கூறப்படும் சம்பவத்தில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
