குரங்குக்கு ரயில்வே அதிகாரிகள் கட் அவுட் வைத்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரில் மெட்ரோ ரயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்திலுள்ள ஒன்பது ரயில் நிலையங்களில் குரங்குத் தொல்லை அதிகமாக உள்ளது. பயணிகளின் உடைமைகளை எடுத்துச்செல்வதும், தனது சேட்டைகளால் பயணிகளைப் பயமுறுத்துவதும் ரயில்வே நிர்வாகத்துக்குப் பெரும் இடையூறாக இருந்தது. சிலநேரங்களில் குரங்குகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் நிலையும் இருந்துவருகிறது.
இதனால், குரங்குகளை ரயில் நிலையத்திலிருந்து விரட்டுவதற்காக ரயில்வே அதிகாரிகள் முயன்றனர். அதற்காக குரங்குளை அச்சுறுத்தும் வகையில் நீண்டநேரம் பெரும் சத்தத்தை ஒலிக்கச்செய்தனர். அதற்கு ஓரளவு பலன் அளித்தது.
ஆனாலும், அந்த ஒலிக்கு குரங்குகள் நன்கு பழக்கப்பட்டுவிட்டன. அதையடுத்து குரங்குகள் பயமின்றி வழக்கம்போல சுதந்திரமாக சுற்றித் திரியத் தொடங்கின.
எந்த முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், கடைசியாக குரங்குகளின் கட் அவுட்டுகளை வைத்ததுடன் நீண்டநேரம் பெரும் சத்தத்தை ஒலிக்கச் செய்தனர்.
மெட்ரோ ரயில்வே அதிகாரிகளின் இந்த முயற்சிக்குத் தற்போது எதிர்பார்த்த பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குரங்குகள் வராமல் இருப்பதாக மகிழ்ச்சியோடு கூறுகின்றனர் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள்.