தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, படையப்பா, மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்தன என்பதையும், அதில் எந்த படம் அதிக வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது என்பதையும் பார்ப்போம்.
விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி. படம் வெளியான நேரத்தில் 38 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம், 2024ஆம் ஆண்டு மீண்டும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சுமார் 32 கோடி ரூபாய் வசூல் செய்து ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
கில்லியின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இந்த மெகா ஹிட் திரைப்படம், அப்போது 63 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது. 26 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் தியேட்டர்களில் வெளியான படையப்பா, ரீ-ரிலீஸில் சுமார் 18 கோடி ரூபாய் வசூல் செய்து ரசிகர்களை கவர்ந்தது.
2011ஆம் ஆண்டு அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா, உலகளவில் 83 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட் ஆனது. இந்த படம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி மீண்டும் கோலாகலமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸில் சுமார் 21.5 கோடி ரூபாய் வசூல் செய்து, மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.
இருப்பினும், மங்காத்தா மற்றும் படையப்பா ஆகிய படங்களின் ரீ-ரிலீஸ் வசூல்களை விட கில்லி அதிக வசூல் செய்துள்ளது. இதன் மூலம், விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த நம்பர் ஒன் ஹிட் திரைப்படமாக தற்போது பார்க்கப்படுகிறது.
