சர்வதேச அரசியலில் திடீர் திருப்பமாக நண்பன் ஈரானைக் கழட்டிவிட்டு, எதிரி அமெரிக்காவுடன் வடகொரியா கைகோர்க்க இருப்பதாக, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேல் – அமெரிக்கா இரண்டு நாடுகளும் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தன. ஈரான் தனியாக இரு நாடுகளையும் எதிர்த்து போரிட்டு வருகிறது. தங்களின் முக்கியத் தலைவர்கள் பலரை இழந்தாலும் போரில் இருந்து ஈரான் பின்வாங்குவதாக இல்லை. அமெரிக்கா – இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டாமல் விடமாட்டோம் என்று சூளுரைத்துள்ளது.
போருக்கு நடுவே ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக நாடுகள் கடுமையான கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டினை சந்திக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதையடுத்து ஈரான் உடனான போரினை நிறுத்துமாறு ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் டிரம்புக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் டிரம்ப், ஈரான் உடனான போரினை நிறுத்த முடியாது என அடம்பிடிக்கிறார்.
இந்தநிலையில் ஆரம்பம் முதலே இந்த போரில் ஈரானுக்கு எந்தவொரு உதவியையும் வடகொரியா செய்யவில்லை என்று, தென்கொரிய உளவுத்துறையான் என்ஐஎஸ் (NIS -National Intelligence Service) தெரிவித்துள்ளது. இதுவரையிலும் ஈரானுக்கு எந்தவொரு ஆயுதங்களையும் வடகொரியா அனுப்பவில்லை. அத்துடன், மறைந்த ஈரானின் முன்னாள் தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு இரங்கல் செய்தியையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது மகன் மொஜ்தபா காமெனிக்கு வாழ்த்துச் செய்தியையும், வடகொரியா கூறவில்லை என்பதையும் என்ஐஎஸ் சுட்டிக்காட்டி இருக்கிறது.
ரஷ்யா, சீனா இருநாடுகளும் டிரம்பை வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில், வடகொரியா நேரடியாக டிரம்பை விமர்சனம் செய்யாமல் தவிர்ப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்காவுடன் வடகொரியா இணைவதற்கு வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் – அமெரிக்கா – ஈரான் போரால் வடகொரியாவின் பொருளாதாரம் பெரிதாக அடிவாங்கி இருக்கிறது. தொழில்துறை விநியோகம் தடைபட்டதால், விலைவாசி உயர்ந்து அந்நியச் செலவாணியும் தேக்கம் அடைந்துள்ளது.
இந்த காரணங்களால், அமெரிக்கா உடன் இணக்கமாகப் போகும் முடிவினை கிம் ஜாங் உன் எடுத்திருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அமெரிக்கா – வடகொரியா நாடுகள் கைகோர்த்தால் சீனா – ரஷ்யா நாடுகள் இதை எப்படி எதிர்கொள்ளும் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அடுத்த ஓரிரு மாதங்களில் சர்வதேச அரசியலில் பல்வேறு அதிரடிகள் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
