“நாங்கெல்லாம் சமையலுக்கு கொஞ்சம் எண்ணெய் தான் யூஸ் பண்றோம்.. ஏன்னா எங்க வீட்ல எல்லாமே நான்ஸ்டிக் பாத்திரங்கள் தான்” என்று தங்கள் ஆரோக்கியத்துக்காக பெரிதாய் ஏதோ செய்துவிட்டதாக திருப்தி அடைபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். எண்ணெய் குறைவாக பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் நான்ஸ்டிக் பாத்திரங்களை முறையாக உபயோகிக்கவிட்டால் அது நம் உயிரையே கூட குடித்துவிடும்.
இந்த வகை பாத்திரங்களில் இருக்கும் Teflon பூச்சு Perfluoro octanoic acid என்ற இரசாயனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது நம்முடைய சுற்றுச்சூழல் அல்லது மனித ஜீரண மண்டலத்தால் எளிதில் உடைக்கப்பட முடியாத ஒரு பொருள். இந்த வேதிப்பொருள் உணவில் கலக்கும்போது அதனால் உணவு விஷமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதை முக்கியமாக கவனிக்க வேண்டும். மேலும் இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கலாம் என ஒரு சில ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் Perfluoro octanoic acid என்பது கல்லீரல் சிதைவு, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவது மற்றும் தைராய்டு பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். மேலும் இது நம்முடைய ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம் என்றும் தகவல்கள் சொல்கின்றன. ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் நாம் அதிக அளவு PFOA நம் உடலில் கலக்கும்போது மட்டுமே உண்டாகும்.
எனவே எப்பொழுதும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அளவுக்கு அதிகமாக வெப்பப்படுத்த கூடாது. ஏனெனில் அது அதிக வெப்பநிலையில் உடைய தொடங்குகிறது. நான்ஸ்டிக் கோட்டிங்கில் கீறல்கள் விழும் விதத்தில் எதுவும் செய்ய கூடாது. முக்கியமாக என்ன தான் இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாமல் அவ்வப்போது அவற்றை மாற்றிவிடவேண்டும். இவைகளை கண்டிப்பாக பின்பற்றும் பட்சத்தில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவோர் உயிரை பறிக்கும் ஆபத்துகளில் இருந்து தங்களையும் தங்கள் வீட்டாரையும் பாதுகாக்கலாம்.