வெனிசுலா நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, மனித உரிமை குரலாக உலகளவில் கவனம் பெற்றவர். 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பிறந்த அவர், வென்டே வெனிசுயேலா (Vente Venezuela) என்ற கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
2002-ம் ஆண்டு, சுமேட்டே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பை நிறுவி, வாக்கெடுப்பு தெளிவுத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் 2011 முதல் 2014 வரை வெனிசுலா நாட்டின் தேசிய சபை உறுப்பினராக பணியாற்றினார். அரசின் அடக்குமுறைகளையும் சுதந்திரக் குறைவையும் எதிர்த்து பேசியதால், 2014-ல் அவரது பதவி நீக்கப்பட்டது.
ஆனால், மரியா கொரினா மச்சாடோ அரசியல் அழுத்தங்களையும் துன்பங்களையும் பொருட்படுத்தாமல் தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். 2024-ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரிய மனித உரிமை விருதான “சகாரொவ் பரிசு” அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு பரிந்துரைகளில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.
தன் நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நீதிக்காக தடைகளை மீறி போராடும் மச்சாடோ, உலகளவில் ‘மனித உரிமைகள் காக்கும் போராளி’ என்ற அடையாளத்தைப் பெற்றார். வெனிசுலா மக்களின் நம்பிக்கையை தன்னுள் சுமந்து நிற்கும் அவரின் வாழ்க்கை, அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தின் சின்னமாக மாறியது. தற்போது 2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்திருப்பது அமைதிக்கான ஒரு போராளிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
