நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. இந்தியா பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்யும் நாடாகும்.
நம்மிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், ஏடிஎப் (ATF) ஆகியவை போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. விநியோகச் சங்கிலிகள் எந்தவித இடையூறும் இன்றி சீராக இயங்கி வருகின்றன.
பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. மேலும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. மக்கள் பீதி அடையவோ, தேவையின்றி கூடுதலாக வாங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். எரிபொருள் இருப்பு நிலையானதாகவும் போதுமானதாகவும் உள்ளது’’ என தெரிவித்துள்ளது.
