மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இஸ்லாமாபாத்தில் தொடங்கிய முயற்சி, தற்போது மிகப்பெரிய சவால்களைச் சந்தித்து வருகிறது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் உடனான போர் இன்னும் முடியவில்லை என்றும், எந்த நொடியும் புதிய திருப்பங்கள் ஏற்படலாம், நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் எச்சரித்திருப்பது, அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ‘நோ மோர் மிஸ்டர் நைஸ் கை’ (No more Mr. Nice Guy) கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஈரானில் உள்ள அனைத்து மின் நிலையங்களையும், பாலங்களையும் தகர்ப்பேன் என்று அவர் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் ஆவேசப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தங்களுக்கு எதிராகச் சதி செய்வதாகக் கூறி, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அமெரிக்காவின் கோரிக்கைகள் மிக அதிகம் என்றும், இந்தச் சந்திப்புகள் தங்களை ஏமாற்றும் முயற்சி என்றும் ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கை குறைந்திருந்தாலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், 600-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் என நகரே ஒரு கோட்டை போல மாற்றப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கக்கூடத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், மத்திய கிழக்கு ஆசியாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த உலகத்தின் தற்போதைய கேள்வியாக உள்ளது.
