இந்தியாவில் முக்கியமான பொது போக்குவரத்தாக ரயில்கள் இருக்கின்றன. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு பெரிய தலைவலி டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா இல்லையா என்பது தான்.
இந்தச் சூழலில், ரயில் பயணிகளுக்கு முக்கியமான நன்மை தரும் ஒரு பெரிய மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. இதன்படி, ரயில் புறப்படுவதற்கு முன் 10 மணி நேரத்திலேயே டிக்கெட் முன்பதிவு நிலை (Reservation Chart) வெளியிடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது, ரயில் டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் முடிந்து விடுகின்றன. அப்போது பலரது டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். பின்னர் யாரேனும் டிக்கெட்டை ரத்து செய்தால், அந்த இடம் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும்.
முன்னதாக, இந்த முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லையெனில், பயணிகள் தங்களின் பயண திட்டங்களை மாற்றுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு, பயணிகள் சங்கங்கள் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன. அதன்படி, கடந்த ஜூலை மாதத்திலிருந்து 8 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.
இப்போது அதனை மேலும் விரிவாக்கி, 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 8 மணிக்கே தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.
அதேபோல், மற்ற அனைத்து ரயில்களுக்கும் அவை புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம், காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் 10 மணி நேரத்திற்கு முன்பே தங்களின் டிக்கெட் நிலையை அறிந்து, மாற்று பயண ஏற்பாடுகள் அல்லது பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட முடியும். இது ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
