தொலைநோக்கு பார்வை குறைபாடு (பிரஸ்பியோபியா) கொண்டவர்களுக்கு பிரச்சனையை சரிசெய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் புதிய கண் சொட்டு மருந்துகளை உருவாக்கியுள்ளனர்.
கோபன்ஹேகனில் உள்ள ஐரோப்பிய கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (ESCRS) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில், இந்த சொட்டு மருந்துகள் கண் பரிசோதனை அட்டவணையில் கூடுதல் வரிகளை படிக்க உதவுவதோடு, இரண்டு ஆண்டுக்கும் மேலான நிலையான முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக உள்ளது.
தி கார்டியன் வெளியிட்ட அறிக்கையின் படி, 766 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒருநாளில் இரண்டு முறை, காலை எழுந்ததும் மற்றும் ஆறு மணிநேரத்திற்குப் பிறகு சொட்டு மருந்துகளை பயன்படுத்தினர். இதன் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டு, கண் பார்வை மேம்பாட்டை உறுதிப்படுத்தியது.
சொட்டு மருந்துகளுக்கான பொதுவான பக்கவிளைவுகள் மங்கலான பார்வை, கண் எரிச்சல் மற்றும் தலைவலி ஆகியவையாக இருந்தாலும், பாரம்பரியக் கண்ணாடி அல்லது அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது இது பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய மாற்றியாக அமைந்துள்ளது.
