தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்காக அஞ்சல் துறை புதிய முக்கிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இனி வாழ்நாள் சான்றிதழ் பெற வங்கிகள், அரசு அலுவலகங்கள் அல்லது பல மணி நேரம் காத்திருக்கும் அவசியம் இல்லை. தபால்காரரே நேரடியாக இல்லத்துக்கு சென்று, பயோமெட்ரிக் அடிப்படையில் டிஜிட்டல் ‘லைஃப் சர்டிபிகேட்’ச் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல், ஓய்வூதியர்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய நடைமுறையாக இருப்பதால், உடல்நலம், முதிர் வயது, தொலைதூரப் பயணம் போன்ற சிரமங்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த ‘டோர் ஸ்டெப்’ சேவையை அஞ்சல் துறை வேகமாக விரிவாக்கியுள்ளது. இதனால் முதியவர்களுக்கு நிம்மதி கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் செயல்படும் இச் சேவையில், தபால்காரர் வரும்போது ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரங்கள் உள்ளிட்ட அவசியமான தகவல்கள் பதிவுசெய்யப்படும். பிறகு விரல் ரேகை சரிபார்க்கப்பட்டதும், சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் உருவாகி, உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும்.
இந்த சேவைக்கு ரூ.70 என குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி அல்லது ஆன்லைன் செயல்முறைகளில் தேர்ச்சியில்லாத முதிய ஓய்வூதியதாரர்களுக்கு இது எளியதும் பாதுகாப்பானதுமாக கருதப்படுகிறது. இதற்காக தபால்காரர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் பெறுவதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, இந்த சேவையை விரைவில் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வசதி மிகத் தேவையானதாக இருக்கிறது.
மேலும், புதிய டிஜிட்டல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் மூலம் ஓய்வூதியர்களின் தரவு பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் துறை விரைவில் கிராமப்புற தபால் நிலையங்களில் கூட இந்த சேவையை முழுமையாக அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
