இன்று நாம் கையில் பணமே இல்லாமல், GPay, PhonePe என்று மொபைல் மூலமாகவே கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளைச் செய்து வருகிறோம். இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், ரிசர்வ் வங்கி (RBI) தனது ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ (Payments Vision 2028) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் நாம் எதிர்பார்க்காத பல அதிரடி மாற்றங்கள் வரப்போகின்றன.
முதலில், முதலீட்டாளர்களின் பாதுகாப்புக்கு ஒரு மிகப்பெரிய உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் அக்கவுண்டில் இருந்து தவறாகப் பணம் எடுக்கப்பட்டால், நீங்களும் உங்கள் வங்கி மட்டுமே அதைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. ஆனால், இனிமேல் அப்படி இல்லை. “பகிரப்பட்ட பொறுப்பு முறை” (அதாவது,Shared Responsibility Framework) என்ற புதிய விதியின்படி, உங்கள் வங்கி மட்டுமல்ல, யாருடைய கணக்கிற்குப் பணம் சென்றதோ, அந்த வங்கியும் சேர்ந்துதான் பொறுப்பேற்க வேண்டும். இது ஆன்லைன் மோசடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, செக் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ். பேப்பரில் கையெழுத்துப் போடும் செக்கின் நம்பிக்கையும், ஆன்லைன் பேமெண்ட்டின் வேகமும் ஒன்றாகச் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘இ-செக்’ (Electronic Cheque). இனிமேல் பேப்பர் செக்குக்கு பதிலாக, டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டு அனுப்பும் இ-செக் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மூன்றாவதாக, அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) போன்ற பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் இனி ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரப்போகின்றன. பணப் பரிவர்த்தனைகளில் இந்த நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதால், அவற்றுக்கும் சில விதிமுறைகளை வகுக்க RBI முடிவு செய்துள்ளது.
நான்காவதாக, இனிமேல் நீங்கள் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு உங்கள் கணக்கை மாற்றுவது, சிம் கார்டு மாற்றுவதைப் போல மிக எளிதாக மாறப்போகிறது. ‘பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்’ (Payments Switching Service) என்ற புதிய வசதி மூலம், வாடிக்கையாளர்கள் சிரமமின்றி வங்கிகளை மாற்றிக் கொள்ளலாம்.
வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவது மற்றும் பெறுவதையும் எளிதாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கார்டு பேமெண்டுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது, ஆதார் மூலம் பணம் எடுக்கும் ஏஇபிஎஸ் (AePS) முறையை மேம்படுத்துவது எனப் பல மாற்றங்கள் அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கின்றன. மொத்தத்தில், இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இன்னும் பாதுகாப்பாகவும், வேகமாகவும், எளிமையாகவும் மாறப்போகிறது.
