இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களும், செப்டோ, பிளிங்கிட் போன்ற குயிக் காமர்ஸ் தளங்களும் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பொருட்களை ஆர்ட்டர் செய்யும்போது, பணம் செலுத்தும் இரண்டு வழிகள் உள்ளன: ஆன்லைனில் யுபிஐ, நெட் பேங்கிங் மூலம் உடனடி கட்டணம் செலுத்துதல் மற்றும் கேஷ் ஆன் டெலிவரி (பொருள் வந்தபோது பணம் கொடுப்பது).
கேஷ் ஆன் டெலிவரிக்கான கட்டணம் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறைகளோடு ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும், இது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணையை தொடங்கி இருப்பதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஸி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேஷ் ஆன் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் என்ற செயல்முறை என்பது ஒரு டார்க் பேட்டர்ன் செயல்முறை என குறிப்பிட்டு இருக்கும் அவர் இது நுகர்வோரை தவறாக வழி நடத்துவது மட்டுமல்லாமல் ஒரு நுகர்வோரிடமிருந்து சுரண்டும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த இகாமர்ஸ் தளங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒருவேளை இந்த நிறுவனங்கள் மக்களை தவறாக வழிநடத்தி அவர்களிடமிருந்து கூடுதல் கட்டணங்களை வசூலிப்பது கண்டறியப்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நிறுவனங்களுக்கு அபராதங்கள் மற்றும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.